இன்றைக்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவண்ணாமலையில் தவசீலர் என்பவருக்கும், முத்தம்மை என்பவருக்கும் ஆனி மாதம், மூல நட்சத்திரத்தில் அருணகிரிநாதர் அவதரித்தார். இவருக்கு நான்கு வயது மூத்த தமக்கை ஆதியம்மை என்பவர் உண்டு.
அருணகிரி வீட்டிலுள்ள ஒருவர் பேச்சையும் கேட்காமல், தமது விருப்பம்போல் எல்லோரையும் அதிகாரம் செய்தும், மனம் போன போக்கில் சென்றும் காலம் கழித்து வந்தார். கல்வியிலும் நாட்டம் செல்லவில்லை. இதனால் மனம் வருந்திய தவசீலர் ஒருநாள் இரவு தமது நண்பரிடம் சொல்லி விட்டு தலயாத்திரை சென்று விட்டார். ஒரு வருடமாகியும் திரும்பி வராததால் முத்தம்மையார் மனம் வருந்தி நோயில் விழுந்தார். வைத்தியர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அருணகிரியை அவரது தமக்கை ஆதியம்மையிடம் ஒப்படைத்துவிட்டு இறைவனடி சேர்ந்தார்.
அருணகிரிக்கு ஏற்பட்ட தகாத நட்பால் கனகாங்கி என்ற நடனக்காரியுடன் தொடர்பு உண்டாகிறது. இதனால் அவளுடைய வீட்டிலேயே தங்கி விடுகிறார். அருணகிரி தனது தமக்கை ஆதியம்மையிடம் இருந்து அடிக்கடி தனது நண்பர்கள் மூலம் பணம் பெற்று நடனக்காரியிடம் கொடுத்து உல்லாசமாக இருந்து வந்தார். நாளடைவில் ஆதியம்மையிடம் பணம் வருவது குறைந்துவிட்டது. எனவே, கனகாங்கி அருணகிரியை வீட்டை விட்டு விரட்டி விட்டாள். அருணகிரி தமக்கையைத் தேடி வந்தார். ஆனாலும் இரவு நேரத்தில் அருணகிரிக்கு மீண்டும் தாசிகளின் நினைவு வந்து தமக்கையிடம் பணம் கேட்டார். ஆதியம்மையார் அருணகிரிக்கு அறிவுரைகள் கூறினார்.
அன்றிரவு அருணகிரி வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றார். கோயிலில் உள்ள வல்லாள கோபுரத்தின் உச்சியில் ஏறி உயிர் விட துணிந்து "ஒருவன் இருந்தால் காக்க" என்று சொல்லிக் கொண்டே குதித்தார். அப்போது முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அவரைக் காப்பாற்றி, மந்திரம் உபதேசித்து மறைந்தார். உடனே அருணகிரி தியானத்தில் அமர்ந்தார். 12 வருடங்கள் கழித்து அருணகிரியார் முன்பு முருகப்பெருமான் காட்சி தந்து தமது வேலினால் அவரது நாக்கில் எழுதி திருப்புகழை ஓதும்படி பணித்தார். அருணகிரி "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்ற திருப்புகழைப் பாடினார். பின்னர் முருகப்பெருமான் அருணகிரிநாதரை வயலூர் வருமாறு பணித்தார்.
வயலூரில் பொய்யாக் கணபதி முன் "கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழைப் பாடித் துதித்து, முருகனையும் பாடிவிட்டு அங்கிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டு திருச்செந்தூர் அடைந்தார். இத்தலத்தில் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு நடன தரிசனம் தந்தார். அங்கிருந்து பழனி வந்து முருகவேளைத் துதிக்க முருகன் அவருக்கு ஜெபமாலையைத் தந்து அருள்புரிந்தார். சுவாமிமலையில் அவருடைய தமக்கை ஆதியம்மையார் அவரைக் கண்டு வணங்கி முருகனடியைச் சேர வேண்டினார். அருணகிரியார் முருகப்பெருமானைத் துதிக்க முருகன் காட்சி தந்து ஆதியம்மையாரை தமக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். மீண்டும் வயலூர் வந்த அருணகிரிநாதர் கனவில் முருகன் தோன்றி விராலிமலைக்கு வரும்படி பணித்தார்.
அந்த இரவில் அவர் விராலிமலைக்கு நடந்து சென்றார். நடுவில் வழி தெரியாமல் தவிக்க முருகப்பெருமான் வேடன் வடிவத்தில் வந்து அருணகிரியாரை விராலிமலையில் சேர்த்து காட்சி தந்து அட்டமாசித்திகளையும் அளித்து அருள் புரிந்தார். திருச்செந்தூரில் வில்லிபுத்தூராரை வாதில் வென்றார். அவருடன் போட்டியிட்டபோது பாடிய நூல் "கந்தரந்தாதி". பல தலங்களைத் தரிசனம் செய்துக் கொண்டு திருவண்ணாமலையை அடைந்தார்.
அங்கு அவர் மீது பகைமைக் கொண்ட சம்பந்தாண்டான் என்பவன் காளி தேவி பூசித்து அருணகிரியாரைக் கொல்ல அனுப்பினான். காளி தேவி அருணகிரியாரைக் கொல்ல நெருங்கும்போது முருகப்பெருமான் அவர்முன் குழந்தை வடிவில் காட்சி தர, காளி தேவி சூலத்தை எறிந்து விட்டு முருகப்பெருமானுடன் கயிலைக்குச் சென்று விட்டாள். இந்த நிகழ்ச்சியால் மேலும் பொறாமைக் கொண்ட சம்பந்தாண்டான் பிரபுடதேவனின் அரச சபைக்கு அருணகிரியாரை அழைத்து, மன்னர் முன் தாம் வழிபடும் காளி தெய்வத்தை சபையில் வரவழைத்துக் காட்டுவதாகவும், அதுபோல் அருணகிரியும் தமது தெய்வமான முருகப்பெருமானை வரவழைத்துக் காட்ட வேண்டும் என்றும் கூறினான். அருணகிரியாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
ஆனால் சம்பந்தாண்டான் பூசைக்குத் தோன்றிய காளி தான் அவ்வாறு அரச சபையில் தோன்ற முடியாது என்று கூற, அதற்கு அவன் அருணகிரி அழைக்கும்போது முருகப்பெருமான் சபைக்கு வராமல் செய்யுமாறு வேண்டினான். காளியும் அவ்வாறே செய்வதாகக் கூறி மறைந்தார். காளி தேவி காட்சி தர மறுத்ததால் மன்னனுடைய தண்டனைக்கு அஞ்சி சம்பந்தாண்டான் அன்றிரவே ஊரைவிட்டு ஓடிவிட்டான். மறுநாள் திருவண்ணாமலைக் கோயிலில் பதினாறு கால் மண்டபத்தில் அருணகிரியார் அரசன் முதலானவர்கள் சூழ நின்று முருகப்பெருமானை வேண்டினார். ஆனால் பார்வதி தேவியார் அவரைத் தமது மடியில் இறுகப் பற்றிக்கொண்டிருந்ததால் முருகனால் வரமுடியவில்லை. தமது யோகநிலையால் இதை உணர்ந்த அருணகிரியார், திருப்புகழ் பாடி பார்வதி தேவி முன் மயிலை நடனமாடச் செய்ய, பார்வதி தேவி தமது கைகளால் அதற்குத் தாளம் போட ஆரம்பித்தார். உடனே முருகப்பெருமான் பார்வதியின் மடியில் இருந்து குதித்து மயில் மீது ஏறி பதினாறு கால் மண்டபத்தில் அனைவருக்கும் காட்சி தந்தார்.
பின்னர் அருணகிரியார் வடநாடு சென்று பல தலங்களை தரிசனம் செய்துக் கொண்டு அரித்துவாரை அடைந்தபோது தவசீலர் ஒருவர் அவரைப் பற்றி விசாரித்தார். அருணகிரியாரும் தம்மைப் பற்றிக் கூற, அதற்கு அந்த தவசீலர் தாமே அவரது தந்தை கூறி தமது உயிரை விட்டார். தம்மை நல்ல நிலையில் பார்க்கவே தமது தந்தையார் இத்தனைக் காலம் உயிரோடு இருந்தார் என்று கருதி அவருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இதற்கிடையே அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை மங்கியது. அங்கு வந்து சேர்ந்த சம்பந்தாண்டான், அருணகிரியாரை வெல்ல வேண்டும் என்று கருதி மன்னனிடம், அருணகிரியார் பாரிஜாத மலர் கொண்டு வந்தால் கண்நோய் தீரும் என்று கூறினான். திருவண்ணாமலை திரும்பிய அருணகிரியாரிடம் மன்னன் தனது கருத்தைத் தெரிவிக்க, அருணகிரியார் தமது திருமேனியை கோயிலின் பேய்க்கோபுரத்தில் வைத்து விட்டு கிளி உருவில் விண்ணுலகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னனுக்குப் பார்வை பெற்றுத் தந்தார். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்ற அழைக்கப்படுகிறது. அப்போது அருணகிரியார் "கந்தரனுபூதி" பாடினார்.
அருணகிரியார் விண்ணுலகம் சென்றபோது, சம்பந்தாண்டான் அவருடைய உடலை எடுத்து கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் புதைத்துவிட்டு ஓடிவிட்டான். விஷயமறிந்த மன்னன் அந்த இடத்தில் மண்டபம் கட்டினான். கிளி உருவில் இருந்த அருணகிரியார் தனது பழைய உருவைக் காட்டி அருள்புரிந்து, ஆனி மாதம், பௌர்ணமி நாளில், மூல நட்சத்திரத்தன்று கந்தவேளின் திருவடிகளை அடைந்தார். கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவை இவர் பாடிய பிற பாடல்களின் தொகுப்பு. அவர் பாடிய 1327 பாடல்களும் "திருப்புகழ்" என்று வழங்கப்படுகிறது.
|